Sunday, 11 March 2012

அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.14.75 லட்சம் கோடியாக குறைவு

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற மார்ச் 2ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 5.90 கோடி டாலர் (295 கோடி ரூபாய்) குறைந்து, 29 ஆயிரத்து 499 கோடி டாலராக (14 லட்சத்து 74 ஆயிரத்து 950 கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 161 கோடி டாலர் (8,050 கோடி ரூபாய்) உயர்ந்து, 29 ஆயிரத்து 505 கோடி டாலராக (14 லட்சத்து 75 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது.
சென்ற 2011ம் ஆண்டின் மார்ச் இறுதியில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 30 ஆயிரம் கோடி டாலரைத் தாண்டி, அதாவது, 30 ஆயிரத்து 480 கோடி டாலராக இருந்தது. இது, சென்ற ஆகஸ்ட்டில், 32 ஆயிரத்து 200 கோடி டாலராக அதிகரித்தது. ஆனால், இது செப்டம்பரில், 31 ஆயிரத்து 150 கோடி டாலராக குறைந்து போனது.
கடந்த 2011ம் ஆண்டில், சர்வதேச அளவில் நிலவிய பொருளாதார நெருக்கடியால், நாட்டின் பங்கு வர்த்தகத்தில் சுணக்க நிலை காணப்பட்டது. இதனால், பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்தன.மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source:தினமலர்

No comments:

Post a Comment