Sunday, 11 March 2012

உற்பத்தி குறைவால் ஏலக்காய் விலை விர்...

சர்வதேச சந்தையில், இந்திய ஏலக்காய்க்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில், திருமண சீசன் காரணமாக, உள்நாட்டிலும் இதற்கான தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் ஏலக்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதால், செவ்வாயன்று கிலோவுக்கு, 300 ரூபாய் அதிகரித்து, 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஏலக்காய் உற்பத்தியில், கேரள மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேனி மாவட்டத்தில், அதிக அளவில் ஏலக்காய் விளைகிறது. தமிழகத்தில் ஏலக்காய் விளைந்தாலும், கேரளா ஏலக்காய்க்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் ஏலக்காய் உற்பத்தியில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் ஏலக்காய் உற்பத்தி எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால், இந்தியாவில் ஏலக்காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தற்போது திருமண சீசன் என்பதால், ஏலக்காய்க்கு உள்நாட்டிலும் தேவை அதிகரித்துள்ளது. தேவை உயர்ந்து, உற்பத்தி சரிவடைந்துள்ளதால் ஏலக்காய் விலை அதிகரித்துள்ளது.ஏலக்காயின் ஏற்றுமதி உயர்ந்துள்ளதால், ஆன்-லைன் வர்த்தகத்தில், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெளிமார்க்கெட்டில் முதல் தர ஏலக்காய், கிலோவுக்கு, 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் வரை கிலோ, 900 ரூபாய்க்கு விற்ற முதல் தர ஏலக்காய், 300 ரூபாய் அதிகரித்து, கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இரண்டாம் தர ஏலக்காய் கிலோ, 700 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாயாகவும், மூன்றாம் தர ஏலக்காய் கிலோ, 550 ரூபாய்க்கு விற்றது, 850 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.ஏலக்காய்க்கு மார்க்கெட்டில் தட்டுப்பாடு நிலவுவதால், பெரிய வியாபாரிகள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக, ஏலக்காய் விலையில், மேலும் உயர்வு ஏற்படும் என தெரிகிறது.



Source:தினமலர்

No comments:

Post a Comment