Sunday, 1 January 2012

முன்பேர சந்தை விற்றுமுதல் ரூ.131 லட்சம் கோடி


நடப்பு நிதியாண்டின், டிசம்பர் 15ம் தேதி வரையிலுமாக, நாட்டின் முன்பேர வர்த்தகம் 130.57 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 78.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆக, முன்பேர வர்த்தகம் 65% வளர்ச்சி கண்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் மீது மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி) தெரிவித்துள்ளது.
நாட்டில், தற்போது 23 முன்பேர வர்த்தக சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், சோயா எண்ணெய், கொண்டைக் கடலை மற்றும் கொத்தவரங்காய் ஆகியவற்றின் மீது அதிகளவில் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், டிசம்பர் 15ம் தேதி வரையிலான காலத்தில், முன்பேர வர்த்தக சந்தைகளில், உலோகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் 2 மடங்கு அதிகரித்து, 77.08 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில், 35.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில், வேளாண் பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகம், 50 சதவீதம் அதிகரித்து, 9 லட்சம் கோடியிலிருந்து, 13.54 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், எரிபொருட்கள் மீதான வர்த்தகம் 35.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15.19 லட்சம் கோடியிலிருந்து, 20.57 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.டிசம்பர் 1-15ம் தேதி வரையிலான காலத்தில், தேசிய அளவில் செயல்பட்டு வரும், மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்.) முன்பேர சந்தையில், மிக அதிகபட்ச அளவாக, 7 லட்சத்து 6 ஆயிரத்து 289 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, என்.சி.டீ.இ.எக்ஸ் (84 ஆயிரத்து 829 கோடி), ஐ.சி.இ.எக்ஸ் (11 ஆயிரத்து 884 கோடி), என்.எம்.சி.இ (11 ஆயிரத்து 777 கோடி), மற்றும் ஏ.சி.இ. (6,890 கோடி) ஆகிய முன்பேர சந்தைகள் இடம்பெற்றுள்ளன.தற்போது, நம் நாட்டில் தேசிய அளவில் 5 முன்பேர வர்த்தக சந்தைகளும், மண்டல அளவில், 18 முன்பேர வர்த்தக சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன.
Source:indiafinancebazaar

No comments:

Post a Comment