சர்வதேச நிதிநெருக்கடி, பணவீக்கம் உயர்வு உள்ளிட்ட பிரச்னைக்கு இடையிலும், இந்த ஆண்டில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு 34 சதவீதமும், வெள்ளிக்கு 11 சதவீதமும் லாபம் கிடைத்துள்ளது.
இது வரை இல்லாத வகையில் இந்த ஆண்டில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. அதாவது, கடந்த ஏப்ரல் 25ம் தேதி 1 கிலோ வெள்ளி விலை ரூ.75,020 என்ற அதிகபட்ச உயர்வை எட்டியது.
இதுபோல், சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம், செப்டம்பர் 6ம் தேதி 1,923 டாலராகவும், இங்கு 24 காரட் 10 கிராம் தங்கம் விலை நவம்பர் 16ம் தேதி ரூ.29,390 ஆகவும் உயர்ந்து புதிய சாதனை படைத்தது.
எனினும், இப்போது சற்று விலை குறைந்துள்ளது. கடந்த 2010 டிசம்பர் 31ம் தேதி 24 காரட் 10 கிராம் தங்கம் விலை ரூ.20,585 ஆகவும், 1 கிலோ வெள்ளி விலை ரூ.47,030 ஆகவும் இருந்தது. அதாவது கடந்த ஓராண்டுக்கு முன்பு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் 34 சதவீத லாபமும், வெள்ளியில் முதலீடு செய்திருந்தால் 11 சதவீத லாபமும் கிடைத்திருக்கும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், துனிசியா, லிபியா, ஏமன், சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகார அரசுக்கு எதிரான போராட்டம் வெடித்ததால் கச்சா எண்ணெய் உயர்ந்தது, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடன் நெருக்கடியால் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, நம் நாட்டில் பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த கடன் வட்டியை அதிகரித்ததால் ஏற்பட்ட வளர்ச்சி பாதிப்பு ஆகிய காரணங்களால் பாதுகாப்பு கருதி தங்கம், வெள்ளியில் முதலீடு அதிகரித்தது. இதனால், இதன் லாபமும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment